யாழ் மக்களை பிரமிக்க வைத்த பழங்காலத்து கார்களின் அணிவகுப்பு!
வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் ஏற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன ஊர்தி நடை பயண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனினால் நேற்று (15.12.2024) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன ஊர்தி நடை பயணம் யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமாகி அங்கியிருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி ஊடாக சென்று யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் இனிதே நிறைவடைந்துள்ளது.
வாகன ஊர்தி அணிவகுப்பு
இதன்போது, கலாச்சார நிகழ்வுகளான மேளதாள, நாதஸ்வர இசைகள், சிறுவர் நடனங்கள், கோலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் வாகன பவனியில் 1968 தொடக்கம் 2001ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மாதிரி புகையிரத வண்டி என்பன ஈடுபட்டுள்ளன.
இதில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சுற்றுலா பணியகம், வடமாகாண அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |