எக்ஸ்பிரஸ் பேர்ல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இடைக்கால மனு தாக்கல்
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதத்துடன் தொடர்புடைய இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள வெளிப்படைத்தன்மைக்கான சர்வதேச அமைப்பு (ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம்) கூறியுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுக்கள்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதத்துக்காக இழப்பீடு கோரும் செயல்முறையுடன் தொடர்புடைய முறைகேடுகள், தவறான கையாள்கை, நாசவேலை, இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் தனது மனுவில் முன்வைத்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதத்துடன் தொடர்புடைய இழப்பீடு கோரிக்கையுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்கள், கப்பலின் சேதம் தொடர்பில் மஞ்சுசிறி நிசங்க என்றழைக்கப்படும் சாமர குணசேகர என்பவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு, கடலில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியதாக கூறப்படும் சிந்தக்க வரகொட என்பவருக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக வெளிக்கொண்டு வருவதை தவிர்க்கும் வகையில் தனது இயந்திரத்தை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி மற்றுமொரு தரப்பினர் பணம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டும் அவரது ஊடக அறிக்கை, MV எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதத்தினால் இலங்கை பெற வேண்டிய சரியான தொகையினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தோல்வி ஆகிய முக்கிய நான்கு விடயங்கள் குறித்த மனுவில் சுடிக்காட்டப்பட்டுள்ளன.
கடல் மாசடைதல்
சிங்கப்பூருக்கு சொந்தமான MV எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் 2021 மே மாதம் 20ம் திகதி கொழும்புக்கு அருகே கடலில் தீப்பிடித்து சில நாட்களுக்கு பின்னர் கடலில் மூழ்கியது. இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் நச்சு இரசாயனங்கள் கடலை மாசடையச் செய்ததுடன் இந்த சம்பவம் இலங்கையில் மிக மோசமான கடல் சார்ந்த பேரழிவினை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
விருப்புச் சார்பான முரண்பாடுகளுக்கு மத்தியில், எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதத்துக்கு பின்னரான நடவடிக்கைகளுக்கு கப்பல் காப்புறுதியாளரின் பிரதிநிதியான International Tanker Owners Pollution Federation Limited (ITOPF) இன் உதவியினை இலங்கை அதிகாரிகள் நாடியுள்ளனர்.
நிவாரணம் கோருதல்
உரிய தனிப்பட்ட தரப்பினரிடமிருந்து உரிய இழப்பீட்டினை பெற்றுக்கொள்ளல் மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கும் சுற்றுலா துறையில் ஈடுபடும் நபர்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்தல் ஆகியவை உயர் நீதிமன்றத்திடம் கோரும் நிவாரணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை பெறுதல், வேண்டுமென்றே உதாசீனப்படுத்திய அல்லது தமது கடமைகளை சரியாக செய்தத் தவறிய அரச அதிகாரிகள் மீது வழக்குத் தொடுத்தல், அவர்கள் ஈடுபட்ட இலஞ்சம் அல்லது ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்களை அறிக்கைப்படுத்தல் என்பன ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளன.
இந்த இடைக்கால மனுவை அனுமதிப்பது தொடர்பில் நாளை வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
ச.சதங்கனி
