ஏமனில் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகளின் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை மீது நேற்று (15) ஹவுதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்ததாக ஏமனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏமன் அரசாங்கப் படைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி பயன்படுத்தும் அல்-மாஷிக் மாளிகை வளாகத்திற்குள் உள்ள இராணுவக் கட்டளை மையங்களை இலக்காக வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுள் குறித்த இடத்தின் பாதுகாவலர்களும் பொது ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்தப்பிய பிரதமர்
தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் ஏமனின் பிரதமர் அல்-ஜிந்தானி ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்தபோதிலும் அவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அந்நாட்டு பிரதமர் ஜிந்தானி அவரது எக்ஸ் தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஹவுதிகளின் இந்தத் தாக்குதல் கோழைத்தனமான செயல். ஹவுதி அமைப்பினர் பொதுமக்களையும் அரச நிறுவனங்களையும் தொடர்ச்சியாக குறிவைக்கின்றனர்.
2014ஆம் ஆண்டு ஏமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றிய ஹவுதி அமைப்பினர், அதன் பின்னர் நாட்டின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |