முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம்: சாகல ரத்நாயக்க
புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (09) நடைபெற்ற இலங்கையின் ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தின் ஆறாவது அமர்வின் இரண்டாம் நாளின் விசேட அதிதியாக கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய அமர்வில் இளைஞர் கொள்கை மற்றும் பொருளாதார மாற்ற சட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அதிபர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.
திறந்த பொருளாதாரக் கொள்கை
1978/79 இல் ஆரம்பிக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையே நாம் இந்த நாட்டில் கடைசியாக கண்ட புதிய பொருளாதாரமாகும். அதன்பிறகு, பொருளாதாரக் கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், முற்றிலும் புதிய பொருளாதாரம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, ஒரு நாடாக நாம் போட்டியை எதிர்கொண்டு வேகமாக முன்னேற முடியவில்லை.
மேலும் நமது பொருளாதாரம் அரசியல் தாக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், எங்கள் சிறு குழந்தைகளின் சிந்தனை மனப்பான்மை பாதிக்கப்பட்டது. ஒரு புதிய பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில், இளைஞர்களின் முற்போக்கான சிந்தனையும் அதனுடன் இணைந்து மேம்படுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளின் கல்வி, அறிவு, பயிற்சி ஆகியவற்றை வளர்க்கவில்லை என்றால், எத்தனை பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும், அதனால் பலன் பெற முடியாது.
இளைஞர்களின் மேம்பாடு
அதிபரும் இதனை ஒவ்வொரு தடவையும் சுட்டிக்காட்டுகின்றார். நாம் நகர்ந்து கொண்டிருக்கும் புதிய பொருளாதாரத்திற்குத் தேவையான பயிற்சிகளை இப்போதிருந்தே பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு மனதை தயார்படுத்த வேண்டும். பிற்போக்கு சிந்தனைகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற வேண்டும்.
நல்லவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பலவீனமானவற்றை விட்டுவிட வேண்டும். மேலும், புதிய திட்டத்தில் நல்ல விடயங்களை மாத்திரம் எடுத்துவிட்டு, பலவீனமானவற்றை விட்டுவிட வேண்டும்.
எனவே புதிய சட்டங்களை கொண்டு வருவதுடன் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |











