சிம்பாபே கிரிக்கெட் ஜாம்பவானின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்
இரண்டாம் இணைப்பு
சிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் தான் இறந்ததாக பரவும் செய்தி பொய் என தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், தனது இருப்பை அவர் உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “இது முழுக்க முழுக்க வதந்தி. பொய்யான செய்திகளே வெளியிடப்படுகின்றன. நான் உயிருடன் தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன்,
இந்தச் செய்தியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சிம்பாபே அணியின் முன்னாள் தலைவர் ஹெத் ஸ்ட்ரீக் இன்று (23) காலையில் உயிரிழந்துவிட்டதாக முன்னணி செய்தி நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின.
குறிப்பாக சிம்பாபே அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஹென்றி ஒலாங்கா அது பற்றி டுவிட்டரில் பதிவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
அதனால் மிகவும் சோகமடைந்த ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் வெறும் 49 வயதிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்ததை நினைத்து சமூக வலைதளங்களில் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் செய்திகளை தெரிவித்தனர்.
ஹெத் ஸ்ட்ரீக் இன்னும் இயற்கை எய்தவில்லை நம்மிடையே இந்த உலகில் தான் இருக்கிறார் என்று ஹென்றி ஒலங்கா மீண்டும் தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த செய்திகளை போலி என்று நிரூபித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
சிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 49ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவுக்கு அவரது நண்பரும், பந்து வீச்சாளருமான ஹென்றி ஒலங்கா வருத்தம் தெரிவித்தார்.
சகல துறையிலும் திறமை

சகல துறையிலும் திறமையானவராக திகழ்ந்த இவர், 1993-2005 க்கு இடையில் 65 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளையும் 1,990 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
189 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2,943 ஓட்டங்களையும், 239 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்டதால், கிரிக்கெட் விளையாட்டு துறையில் ஈடுபட அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.