காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்
கடந்த காலங்களில், ஒன்லைன் கடன் நிறுவனங்கள், கடனைப் பெற்று அதனை திருப்பி செலுத்தாதவர்களின் தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவர்களை அச்சுறுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை ஆராய்ந்த கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சம்பந்தப்பட்ட 06 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் மூன்று சீனப் பெண்கள் உட்பட ஐந்து சீன பிரஜைகள் அடங்குவர்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக மிரட்டல்
கடந்த சில நாட்களாக, இவர்களிடம் கடன் வாங்குபவர்கள், கடனை கட்டத் தவறினால், அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கடன் பெற்றவர்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன்படி, கடனுக்காக விண்ணப்பிக்கும் போது பதிவிறக்கம் செய்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் கடனாளியின் தொலைபேசியின் தனிப்பட்ட தரவுகளை அந்த நிறுவனம் இரகசியமாகப் பெற்றுக் கொண்டிருப்பதை விசாரணை நடத்திய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், கடன் வாங்கியவர்கள் குறித்த அவதூறான தகவல்கள் வெளியிடப்படும் என்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடனாளிகளின் தரவுகள்
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கடனை வழங்கிய நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
நேற்று மதியம் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 3 சீன பெண்கள் உட்பட 5 சீன பிரஜைகள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கடனாளிகளின் தரவுகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பராமரிக்கப்படும் கணனி தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டு, அதன் பிரதான சேவர் சீனாவில் உள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் சீன பிரஜைகள் குழுவும் அவர்களது இலங்கை மொழிபெயர்ப்பாளரும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அந்த இடத்தில் ஏராளமான செல்போன்கள் மற்றும் கணனிகள் கண்டெடுக்கப்பட்டன. சீன சந்தேக நபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |