காசா சிறுவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து ஒரு மில்லியன் அரெிக்க டொலர்
காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இதற்கான காசோலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் (Dr. Zuhair Hamdallah Zaid ) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதிபர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry), அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake), வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காசா சிறுவர் நிதியத்திற்காக
ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு பெருமளவிலான நன்கொடையாளர்கள் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தனர்.
அத்துடன், இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முதற்கட்டமாக காசா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
அத்துடன், “காசா சிறுவர் நிதியத்திற்கு” (Children of Gaza Fund) பங்களிக்குமாறு நன்கொடையாளர்களிடம்அதிபர் அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளதுடன், அந்த நிதி எதிர்வரும் நாட்களில் பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு
இதேவேளை நன்கொடையாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பங்களிக்க விரும்புவோர் தமது நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியும்.
அதற்கான பற்றுச் சீட்டை 077-9730396 எனும் எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு அதிபர் அலுவலகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |