நாள்பட்ட சிறுநீரக நோய் தொடர்பில் அமைச்சர் நலிந்த வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் இறுதி நிலை சிறுநீரக நோயை 30% குறைக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் ஒரு கடுமையான பொது சுகாதார சவாலாக மாறியுள்ள நாள்பட்ட சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் சிகிச்சை சேவைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், அதனைத் தடுப்பதிலும் ஆரம்பத்திலேயே கண்டறிவதிலுமே உள்ளது என்று நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
22 லட்சம் மக்கள், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்பு
இலங்கை சிறுநீரகவியல் சங்கத்தால் (SLSON) ஏற்பாடு செய்யப்பட்ட ஏழாவது வருடாந்திர அறிவியல் மாநாடான "நெஃப்கான் 2026"-இன் தொடக்க விழா, கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜெயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகவியல் குறித்த ஒரு முக்கிய சர்வதேச மருத்துவ மாநாடான இது, "அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்: முன்கூட்டிய நடவடிக்கை, நீடித்த தாக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய அமைச்சர், இலங்கை சிறுநீரகவியல் சங்கத்தின் தரவுகளின்படி, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10%, அதாவது 22 லட்சம் மக்கள், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
டயாலிசிஸ் சிகிச்சை
2025-ஆம் ஆண்டுக்குள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 1,12,000 ஆக அதிகரிக்கும் என்றும், சுமார் 8,000 நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கு ஆண்டுக்கு சுமார் 16.8 பில்லியன் ரூபாய் செலவாகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |