திருகோணமலையில் இனவாதம் தொடர்கிறது : பண்ணையாளர்கள் தாக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை – கஜேந்திரன்
பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்தவிடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பேரினவாத அரசு ஆளுகின்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்ததும் இனவாதத்தை ஒழிப்பேன் என கூறி தற்போது இரண்டு வருடங்கள் கடந்தும் திருகோணமலையில் ராஜபக்சர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவாதம் தொடர்கிறது.
எதுவித நடவடிக்கையும் இல்லை
அண்மையில் தம்பலகாமம் பிரதேச பண்ணையாளர்கள் தங்களது கால் நடைகளை மொரவெவ பகுதிக்கு கொண்டு சென்றபோது பெரும்பான்மை இனத்தவர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கால் நடைகளை கொண்டு செல்ல முடியும் என்பதை ஜனாதிபதிக்கு எடுபிடியாக இருக்கின்ற அமைச்சர் ஒருவரே எழுத்து மூலமாகவும் கூட்டத்தில் அனுமதியை வழங்கியுள்ளபோதிலும் கால் நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |