அம்பாறையில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் நேற்று (25) வீடொன்றில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், தனிப்பட்ட விவகாரம் காரணமாகத் உயிர்மாய்ப்பு செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம். றிபாஸ்தீனின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், உயிர்மாய்ப்பு செய்யும் முயற்சியில் மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விபத்து
கல்முனை தரவை கோயில் பகுதிக்கு அருகாமையில் நேற்று முன்தினம் (24) காலை இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சகோதரர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் நடைபெற்றது.
சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம். றிபாஸ்தீன் மேற்கொண்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |