தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்
தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியினர் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா நேற்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட டெனிஸ் போட்டியில் பங்கேற்கும் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய மட்டப் போட்டி
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோஹன் தேசிய மட்ட அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சிறுவயதிலேயே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண டெனிஸ் வீரர்களுக்கு உயர்மட்டப் பயிற்சிகளையும் போட்டி அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதனால் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவாகுவதில் சவால்கள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
டெனிஸ் விளையாட்டு தற்போது விளையாட்டைத் தாண்டி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.
எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி தொடர்ச்சியான சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் (UK) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலின் உரிமையாளருமான சந்திரசேகரம் கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்தந்தை அ.பி. திருமகன் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening