பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
' சிறிலங்கா சுதந்திர கட்சி நாட்டை ஆட்சி செய்த பலமான ஒரு கட்சியாகும். எனினும் இப்போது சிறிய பின்னடைவை சந்தித்துள்ளோம். நாம் எமது மத்திய செயற்குழுவின் அனுமதிக்கமையவே கடந்த நல்லாட்சியில் இணைந்தது செயற்பட்டோம். மாறாக தனிப்பட்ட முடிவுக்கமைய செயற்படவில்லை .
நல்லாட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் (Maithripala Sirisena) இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதனால் அரசாங்கம் இரண்டாக உடைந்து காணப்பட்டது. முன்பு இருந்ததை விட எமது கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது உண்மை.
அதேபோல் பொதுஜன முன்னணியடன் இணைந்து உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதால் எமக்கு 14 ஆசனங்கள் கிடைத்தன. விருப்பு வாக்கு பிரச்சனை அனைத்து கட்சிகளில் உள்ளது அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகின்றோம்.
எமது கட்சி சார்பில் ஒருவர் அரசதலைவர் தேர்தலில் போட்டியிட்டமை கட்சி ஆதரவாளர்களிடையே ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் மறைப்பதில்லை.
இதுவே கூட்டமைப்பு அரசியலின் சுபாவம். எமது ஆதரவாளர்களையும் கட்சியையும் வென்றால் மாத்திரமே குறுகிய காலத்தில் சுதந்திர கட்சி தீர்மானமிக்கதாய்' மாறும். ஆகவே எமது கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விவாதித்துக் கொண்டிருந்தால் எம்மால் இலக்கை அடைய முடியாது.
கோல் மூட்டுவதே தற்போதைய அரசியல், அந்த முறையில் நாம் அரசியல் செய்ய தேவையில்லை. சுதந்திர கட்சி எப்போதும் இனவாதம் பார்த்ததில்லை பார்க்க போவதும் இல்லை. பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தது நாமே.
எதிர்காலத்தில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவது அவசியம். ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்' என்றார்.