இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு பயணமான பணியாளர்கள் : வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!
வேலைவாய்ப்புகள் தொடர்பாக இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எட்டப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையிலிருந்து பணியாளர்கள் குழு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 18ஆம் திகதியன்று 30 இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் மேலும் 10ஆயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணம் கொடுக்க தேவையில்லை
மேலும், இந்த வேலைவாய்ப்புகளுக்காக எந்தவொரு தரப்பினருக்கும் பணம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடு சென்ற பின்னர் யாராவது பணம் கொடுத்து இந்த வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொண்டது தெரியவந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மோசடிகள் இடம்பெற்றதாக
வேலைக்காக பணம் செலுத்தியவர்களை நாடு திரும்புவது தொடர்பில் இரு அரசாங்கங்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணி புரிவதற்காக இலங்கையில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே அமைச்சு இந்த முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.