ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை ஒதுக்கிய அநுர : தயாசிறி விசனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான (Ranil Wickremesinghe) செலவை விட 72 சதவீத அதிகரிப்பு எனவும் இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குருணாகலில் நேற்று (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கான செலவு
அவர் மேலும் குறிப்பிடுகையில், “2024ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான செலவுகள் 6.6 பில்லியன் ரூபாவாகும்.
அது 2025இல் அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் 2.9 பில்லியன் வரை குறைக்கப்பட்டது. அது தொடர்பில் அரசாங்கத்தால் பாரிய பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அது 11.37 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.
2024இல் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஒதுக்கப்பட்டிருந்த நிதியை விட இது 72 சதவீத அதிகரிப்பாகும். ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தமக்கு குறிப்பிட்டளவு நிதி தேவை ஏற்படும் என்பதை இப்போதாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புரிந்து கொண்டிருப்பார் என நம்புகின்றோம்.
பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு
2024இல் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு 1.15 பில்லியனாகும். 2025இல் இது 1.17 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது. 2026க்காக நிதி ஒதுக்கீடு 0.9 பில்லியனாகக் குறைவடைந்துள்ளது.
அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு ஓராண்டுகள் சுமார் 6 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியின் பதில் என்ன?
கடந்த காலங்களில் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட போது அவற்றை கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி.யினர் இப்போதாவது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக எந்தவொரு ஜனாதிபதியும் நிதியை ஒதுக்கிக் கொள்வதில்லை. அது மாத்திரமின்றி கடந்த காலங்களில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழிருப்பது முற்றிலும் தவறு என்றும் இவர்கள் கூறினர். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது?
பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் அற்ற ஜனாதிபதி அநுரகுமார தற்போது நிதி அமைச்சை தன்வசப்பத்தி, தனக்கேற்றவாறு நிதி ஒதுக்கீடுகளை செய்து கொண்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
