ஊரடங்கு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பொலிசாரினால் இன்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டத்தை மீறியமை,சுகாதாதார நடைமுறையினை பின்பற்றாமை போன்ற குற்றங்களின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.