முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு : சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரை
அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
இதேவேளை சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |