இனவாதத்தைக் கக்கும் ரணில் அரசாங்கம் - தமிழ் பிரதிநிதிகளே ஒன்றிணையுங்கள்; விழித்துக்கொண்டாரா வியாழேந்திரன்!
சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது ஒரு மோசமான செயற்பாடு இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல பகுதிகளில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆலயங்கள் திட்டமிட்டு அழைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாறி மாறி இனவாதத்தை வெளியிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்.
தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும்
பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலர் உள்ளிட்ட முஸ்லிம் தரப்பினரும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், இந்த விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும்.
ஏதாவது திருத்த சட்ட நகல் சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுகின்றது. கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்கா அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள்.
இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்க்கின்றார்கள்.
ஈஸ்டர் தாக்குதல்
அதுமட்டுமன்றி, கடந்த ஏப்ரல் 21 சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பலர் உயிரிழந்தனர்.
சஹரன் பாவித்ததாக கூறப்படும், பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்கக் கோரி காத்தான்குடியில் உள்ள ஒரு சில சிவில் சமூக அமைப்பும், அரசியல் தலைவர்களும் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகளும், சில அரசியல் தலைவர்களும், சஹ்ரான் அவமான சின்னம், பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் தாக்குதல் நடந்து மூன்று வருடங்கள் கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு செயற்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுதான் யதார்த்தமான உண்மை. ஓட்டமாவடியிலே வடக்கு கிழக்கு இணையக்கூடாது, ஒரு சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் இனவாதத்தை கக்கிக் கொண்டு வருகின்றார்” எனவும் தெரிவித்துள்ளார்.
