தமிழ்த் தலைவர்களை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் - சிறிலங்காவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும், சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன் போது, புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலவரம் தொடர்பாகவும் தமிழ்த் தலைவர்கள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பின் போது, தமிழ் கட்சிகளைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வேந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் வலியுறுத்தல்
அதேவேளை, இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை, உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்திக்கூறினார் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

