சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு குடியேற முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன் தீவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக படகுகளில் பயணித்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
இதேவேளை குறித்த 14 பேரும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் ரீயூனியன் தீவிற்கு குடிபெயர்ந்த பல இலங்கையர்கள் மீள்குடியேற்றப்பட்ட குழுவில் அங்கம் வகித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் இடம்பெயர்ந்த 7 பேர், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் புறப்பட்ட 2பேர், 2018 இல் குடிபெயர்ந்த 3 பேர் மற்றும் 2019 இல் இந்தோனேசியாவில் இருந்து குடிபெயர்ந்த 2 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
சட்டவிரோதமாக குடிபெயர்ந்த குறித்த நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்கும் நபர்களை பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்புமாறு சிறிலங்கா கடற்படை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் எளிதாக்கப்படும் சட்டவிரோத குடியேற்றங்களில் பங்கேற்பதையோ அல்லது ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |