14 வயது சிறுமியை சீரழித்த உறவுக்கார பெண் -வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்
தன்னுடன் துணையாக இருப்பதற்கென அழைத்துச் சென்ற 14 வயது சிறுமியை விபசாரத்துக்காக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால் துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி சிறுமியை கிராண்ட்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று விபசாரத்துக்கு விற்றுள்ளார்.
இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறி சிறுமியை அழைத்துவந்த சந்தேகநபரான அப்பெண், பல்வேறான வர்த்தகர்களுக்கு தலா, 50,000 ரூபாய்க்கு சிறுமியை விற்று வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
12 வயதில் இருந்தே, அச்சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதெனவும் இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயதெனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.