யாழ் மற்றும் மட்டுவில் நடைபெற்ற மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 வது நினைவேந்தல் நிகழ்வு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இலுப்பையடிச்சேனை நாவத்தோட்டம் கிராமம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
யாழில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றியதை தொடர்ந்து, அவரது திரு உருவப் படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் உறவுகள், ஆதரவாளர்கள் உட்பட பலரும் அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உறவுகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில்

மட்டக்களப்பு மாவட்ட இலுப்பையடிச்சேனை நாவத்தோட்டம் கிராமத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அவர்களும் அப்பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.
மாமனிதர் கிட்டினன் சிவநேசன் படுகொலை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008 ம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

