நெடுந்தீவு -யாழ்ப்பாணத்திற்கு புதிய படகுச்சேவை : ஒரே நேரத்தில் 150 பேர் பயணிக்கும் வசதி
அரசாங்கத்தின் 'பிரஜா சக்தி' (Praja Shakthi) தேசியவேலைத் திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் சுமார் 150 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட புதிய பயணிகள் படகு ஒன்று நெடுந்தீவு–யாழ்ப்பாணம் கடல் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், குறிப்பாகப் பிரதான நிலப்பகுதிக்கும் நெடுந்தீவு போன்ற தொலைதூரத் தீவுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தில் நிலவும் சிரமங்களுக்குத் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல போதுமான வசதிகள் இல்லை
அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஒரே நேரத்தில் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்குத் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், இதனால் நம்பகமான கடல்வழிப் போக்குவரத்தைப் பேணுவதில் சவால்கள் ஏற்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்தப் புதிய படகு 'சி-நோர் ஃபவுண்டேஷன் லிமிடெட்' (C-NOR Foundation Limited) நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ளது.
அதேவேளையில், இதன் செயல்பாடுகள் 'சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்' கீழ் நிறுவப்பட்ட நெடுந்தீவுஅபிவிருத்திச் சங்கத்திடம்' (Delft Development Society) ஒப்படைக்கப்படவுள்ளன.
அமைச்சர் சந்திரசேகரின் முன்மொழிவிற்கு அனுமதி
இப்படகுச் சேவையின் மூலம் கிடைக்கும் வருமானம், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட நெடுந்தீவு பகுதியிலுள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மீன்பிடி, நீர்வளம் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |