யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்! விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் தொடருந்து முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளமை குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், சமையல் கலைஞரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயதான ஆன் லக்ஷா இக்னேஷியஸ் என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் - கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (05) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் தாக்குதலை மேற்கொண்ட குறித்த இளைஞன் அரியாலை பகுதியில் தொடருந்தின் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாயார் மீதும் தாக்குதல்
அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
அப்பெண்ணை படுகொலை செய்த பின்னர் கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான தேவதாஸ் புகழரசன் என்ற இளைஞனே தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
தடயவியல் காவல்துறையினர் சோதனை
யாழில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கொலை செய்யப்பட்ட பெண் சமையல் கலைஞராக பணியாற்றும் நிலையில் குறித்த இளைஞனும் சமையல் கலைஞர் படிப்பினை நிறைவு செய்து பயிற்சி சமையல் கலைஞனாக வேலை செய்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் காதல் விவாகரம் இருந்து இருக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் கொலை நடைபெற்று இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் காவல்துறையினர் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில் குறித்த பெண் தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |