தாய்வான் வான் பரப்பில் 19 சீனப் போர் விமானங்கள் ரோந்து நடவடிக்கை!
கடந்த 24 மணித்தியாலத்தில் தாய்வானுக்கு அருகில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தாய்வான் அருகில் சீனா தொடர்ந்து தனது இராணுவ ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.
சீனா இராணுவப் பயிற்சி
கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் ரோந்து சென்றதாக தாய்வான் கூறியுள்ளது.
தாய்வானில் ஊடுருவுவதை மறைக்க சீனா இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்கக்கூடும் என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் சாமுவேல் பாப்பரோ தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவுக்கு அருகில் உள்ள தீவு நாடான தாய்வான்,தன்னை ஒரு சுதந்திர நாடு என கூறி வருகின்ற நிலையில் தாய்வான் தனக்கு சொந்தமானது என சீனா தெரிவித்து வருகின்றது.
தாய்வானின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் நட்பு நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகிறது.
குறிப்பாக இந்த இருநாடுகளும் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தாய்வானுக்கு தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |