மியன்மாரில் பாடசாலைகள் மீது வீழ்ந்த குண்டுமழை: பலியான 19 மாணவர்கள்
மியான்மாரில் (Myanmar) இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு தனியார் பாடசாலைகள் மீதே இவ்வாறு குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.
மியான்மாரில் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகின்றது.
தனிநாடு
இந்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அரச இராணுவத்துடன் போர் நடத்தி வருகின்றது.
இந்தநிலையில், அராகன் இராணுவத்தினருக்கும் மற்றும் மியான்மர் அரச இராணுவத்தினருக்கும் இடையே நேற்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலைகள் மீது சுமார் 227 கிலோ வெடிமருந்துகளைக் கொண்ட வெடிகுண்டுகளை வீசி அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
குழந்தைகள்
இதில், 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலியானவர்களுக்கு 15 முதல் 21 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அராகன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப், இது ஒரு கொடூரத் தாக்குதல் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
