2500 ஆசிரிய உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு : வெளிவருகிறது வர்த்தமானி
தோட்டப் பாடசாலைகளுக்கு 2,535 ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவர்களை இணைத்து அடிப்படை பயிற்சிகளை அளித்து பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பாரிய ஆசிரியர் பற்றாக்குறை
எவ்வாறாயினும், தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் தோட்டப் பாடசாலைகளில் இன்னமும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கல்விக் கல்லூரிகளில் கூட, தகுதியான மாணவர்கள் மிகக் குறைவாகவும், பட்டதாரிகள் ஒரு சிலரே இருப்பதால், தோட்டப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவது கடினமாக உள்ளது,” என்றும் அமைச்சர் கூறினார்.
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
அதற்கு தீர்வாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் சேவைகள் சட்டத்தின் கீழ் மேலும் 500 ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய கல்வி அமைச்சுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் ஆசிரியர் நிலையங்கள் மூலம் மூன்று வருடங்களுக்குள் டிப்ளோமா தரம் வரை பயிற்றுவிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |