கடலில் மீன்பிடிக்க சென்ற போது தோணி கவிழ்ந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (4) பிற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான தோணி
கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழிலாளர் சங்க தலைவரான துரைராஜா முத்தையா, விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவருகையில், குறித்த கடலில் இன்று காலை 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் சென்ற 3 பேர் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.
இதில் கடற்றொழிலாளரான 45 வயதுடைய செல்வகுமார் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் கடற்றொழிலாளர் சங்க தலைவரின் சடலம் காணாமல் போயுள்ளது.
மட்டு போதனா வைத்தியசாலை
காணாமல் போயுள்ள சடலத்தை தேடும் நடவடிக்கையில் கடற்றொழிலாளர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening