கால்பந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணி சாதனை
புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் சமூகத்தின் சாதனை வலு ஏறு முகப்பட்டுள்ள நிலையில், போர்த்துக்கல் நாட்டில் நாடுகளாக அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கு இடையில் இடம்பெற்ற ஆசிய கிண்ணத்தை மையப்படுத்திய ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றியடைந்துள்ளது.
தமிழீழத்தின் சார்பாக 2012 ஆம் ஆண்டு உலக தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கால்பந்தாட்ட அணி கடந்த எட்டாம் திகதி போர்த்துகலில் இன்னொரு வெற்றிப்பதிவை உருவாக்கியுள்ளது.
இறுதி போட்டி
இந்த வெற்றி மூலம் அடுத்த வருடம் குர்திஸ்தானில் நடைபெறவுள்ள கொனீபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் தனக்குரிய இடத்தை தமிழீழ அணி ஏற்கனவே தக்க வைத்துள்ளது.
நாடுகளாக அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கு இடையிலான போட்டிகளான கடந்த 3 ஆந் திகதி முதல் எட்டாம் திகதிவரை போர்த்துக்கலில் இடம்பெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதியல் எச்மொங் அணியுடன் தமிழீழ அணியுடன் களமாடியிருந்தது.
இந்தப் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி வெற்றியீட்டியது.
கொனீபா உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி
பிரான்ஸ், கனடா , சுவிஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வாழும் இளைய தமிழ்வீரர்கள் தமிழீழ அணிக்கான வீரர்களாக களமிறங்கியிருந்தனர்.
அடுத்த ஆண்டு குர்திஸ்தானில் நடைபெறவிருக்கின்ற கொனீபா உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் 16க்கும் மேற்பட்ட தேசங்கள் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .