வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு!
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் 2024 ஆம் ஆண்டின் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 13 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் 21 ஆம் திகதியன்றே பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டமாக நிறைவேற்றம்
அதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம்13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின் சபாநாயகரின் ஒப்புதலுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதிக்குள் அதனை சட்டமாக நிறைவேற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.
டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் பொதுநலச் செலவுகளுக்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அதிலும் இந்த ஆண்டு நலத்திட்ட செலவுகள் சுமார் ரூ. 65 பில்லியனிலிருந்து ரூ. 185 பில்லியன்களாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.