நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (15) இலங்கை மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயம்
இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் தைத்திருநாள் பொங்கல் சிறப்பு பூஜைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூசைகள் இடம்பெற்றன.
செய்திகள் - த.பிரதீபன்
திருகோணமலையில் பொங்கல்
தைப்பொங்கல் தினமான இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன.

குறிப்பாக ஆலயங்களிலும், வீடுகளிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக திருகோணமலை நகர் பகுதிகளில் உள்ள திருக்கோணேஸ்வரா ஆலயம், ஸ்ரீபத்திரகாளிஅம்பாள் ஆலயம் மற்றும் வீடுகளிலும் பொது இடங்களிலும் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - ஹஸ்பர் ஏ.எச்
மூதூரில் தைப்பொங்கல்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மூதூர் பிரதேசத்தில் உள்ள தமிழர் வீடுகளில் இன்று வியாழக்கிழமை (15) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோலங்கள் இட்டு புதுப் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து குடும்பங்களோடு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர்.

அத்துடன் திருகோணமலை - மல்லிகைத்தீவு ஸ்ரீ மங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை (15) காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பொங்கல் பொங்கி தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கைலாகு கொடுத்து பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதையும் காணமுடிந்தது.
அதேவேளை திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - புகாரி மொஹமட்
மன்னாரில் பொங்கல்
இதேவேளை மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றது.
மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று (15) வியாழக்கிழமை காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - ஜோசப் நயன்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று (15.01.20236) நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத்தில் கிருஷ்ண பெருமானுக்கு அதிகாலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
ஆலயப்பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - வ.சக்திவேல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |