அரசாங்கத்தின் உத்தேச 21 ஆவது திருத்தம் கைவசம் - எதிரணி வெளியிட்ட தகவல்
அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இறுதித் தீர்மானம்
இந்தத் திருத்தம் தொடர்பில் எதிர்காலத்தில் நாடாளுமன்ற குழுவினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாமும் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ள அனைத்து அடிப்படை சரத்துக்களும் புதிய திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
சில சரத்துகளுக்கு சர்வஜென வாக்கெடுப்பு தேவைப்பட்டாலும், திருத்தம் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சர்வஜென வாக்கெடுப்பு தேவைப்படும் சரத்துகளை உரிய நேரத்தில் திருத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதே மக்களின் கோரிக்கையாக இருப்பதால், அந்த சட்டத்தை விரைவில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
