போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
22 பிக்குகள் கைது
தாய்லாந்திலிருந்து 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை கடத்தியமை தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஏப்ரல் 25 அன்று 22 பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் (PNB) பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில், அந்த 22 பிக்குகளும் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, மே 02 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அமிதானந்த தேரோ என அடையாளம் காணப்பட்ட மற்றொரு பௌத்த பிக்குவே இந்த சட்டவிரோத கடத்தல் முயற்சியை அரங்கேற்றியதாகக் கூறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு கம்பஹா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரின் வழிகாட்டுதலின் கீழ், இதற்கு முன்னரும் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த விசாரணை தொடர்பில், கடத்தல் நடவடிக்கைக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் அத்துருகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |