19 நாட்களேயான கைக்குழந்தை விற்பனை! தாய் உட்பட அறுவர் அதிரடி கைது
புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ - அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதாகிய சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயும் அவரது சகோதரரும் அனாமடுவ - அடிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், குழந்தையை வாங்கவிருந்த தம்பதியினர் கல்பிட்டி - மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட வானை ஓட்டி வந்த நபர் புத்தளம் - பாலாவிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தரகராக மருத்துவர்
இதேவேளை, இந்த குழந்தை விற்பனையில் தரகராக ஒரு மருத்துவர் செயல்பட்டுள்ளமையும் மேலதிக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வான் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |