அதிகாலைவேளை பேருந்தில் பற்றியது தீ -25 பேர் உடல் கருகி பலி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் சுமார் 33 பேர் பயணம் செய்ததாகவும் சமுருத்தி-மஹாமார்க் அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலை 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்கம்பத்தில் மோதி
அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய பேருந்தின் சாரதி கூறுகையில், டயர் வெடித்ததால் பேருந்து மின்கம்பத்தில் மோதியதாக தெரிவித்தார்.
இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகினர். பேருந்து சாரதி உட்பட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று புல்தானா காவல் கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்தார்.
காவல்துறை விசாரணை
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். "இந்த நேரத்தில் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பதே முன்னுரிமை" என்று கடசனே கூறினார்.
இந்த விபத்து குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேதனை தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
