சர்ச்சைக்குரிய யாழ். நெடுந்தீவு 25000 கொடுப்பனவு விவகாரம்..! காரணம் கூறும் பிரதேச செயலாளர்
நெடுந்தீவு பிரதேசத்தில் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரியப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களது எண்ணிக்கை 1410 எனவும் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது எண்ணிக்கை 4102 எனவும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1190 எனவும் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1216 எனவும் 25 ஆயிரம் கொடுப்பனவுக்காக தெரியப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 778 எனவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயல் தொடர்பாக 2024/2025 ஆம் ஆண்டுகளுக்கான புள்ளிவிபரக் கையேடுகளின் படி நெடுந்தீவு பிரதேச செயலாளரால் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள இடரில் கிராமங்கள்
மேலும் அந்த அறிக்கையில், உடனடியாக மேற்படி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நெடுந்தீவு பிரதேசமானது சகல போக்குவரத்து மார்க்கங்களும் துண்டிக்கப்பட்டதுடன், மின்சாரம் மற்றும் சகல தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டது.

இதனால் குறித்த நேரத்தில் வெள்ள இடரில் கிராமங்கள் தோறும் சென்று சரியான தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக எமது புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையிலும், கடந்தகால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள்
இக்காலப்பகுதியில் நெடுந்தீவில் வசித்த குடும்பங்கள் அனைத்துமே சமூக பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு முகம்கொடுத்ததுடன். பாரிய பாதிப்பினையும் எதிர்கொண்டனர்.

இதன் அடிப்படையிலேயே குறித்த தகவல் வழங்கப்பட்டது. தற்போது அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப உரிய படிவங்களுக்கு அமைவாக பொருத்தமான உத்தியோகத்தர்களால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றேன் - என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |