யாழில் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 255 பாதுகாப்பு நிலையங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்காக 255 பாதுகாப்பு நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்று (04.11.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுத்தல், அபாயங்களைக் குறைத்தல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மழை தொடர்பான எதிர்வுகூறல்கள்
இதன்போது, வளிமண்டலவியல் திணைக்கள வளிமண்டலவியலாளர் Zoom இணையவழி ஊடாகக் கலந்துகொண்டு, வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை தொடர்பான எதிர்வுகூறல்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விளக்கமளித்தார்.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 331 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 255 பாதுகாப்பு நிலையங்களின் தேவைகள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், கிராம அலுவலர்களின் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கச் சுற்றறிக்கைகள் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டது.
கிராம மட்ட உதவிச் செயற்பாடுகள் கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களைக் கூட்டி, அனர்த்த அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
அறிவுறுத்தப்பட்ட விடயங்கள்
அராலி, தொண்டைமானாறு மற்றும் அரியாலை உவர் நீர் தடுப்பணைகளின் நீர் முகாமைத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. தடுப்பணைகளிலிருந்து வெளியேறும் நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, நன்னீர் மட்டத்தைப் பேணுவதுடன் வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் ஆராயப்பட்டது.
நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணித் தாய்மார்கள், அனர்த்த காலங்களில் ஏற்படக்கூடிய கடல் போக்குவரத்து அபாயங்களைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலோ தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் பிரசவத்தை மேற்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த வருடங்களிலும் அதற்கு முந்தைய வருடங்களிலும் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு, இந்நோயைத் தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதற்கமைய, வயல் நிலங்களில் பணியாற்றுவோர் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அணுகி, எலிக்காய்ச்சல் தடுப்புக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி), பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், முப்படையினர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |