27 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஐபிசி தமிழ்
காலத்தின் போக்கில் மிக காத்திரமான ஊடகப்பங்காற்றி ஈழத்தமிழர்களுக்கான ஊடகவெளியில் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்ட ஐ.பி.சி தமிழ் என்ற ஈழத்தமிழர்களுக்கான ஊடகப்பிரமாண்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஐ.பி.சி தமிழ் ஊடகமானது உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு ஓர் உறவுப்பாலமாய் இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறது.
பல தடைகளையும், சவால்களையும் தகர்த்தெறிந்து உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழருக்கான பலம் வாய்ந்த ஊடகமாய் மிளிர்ந்து நிற்கிறது.
ஐ.பி.சி தமிழ் வானொலி
1997 ஜூன் 09ஆம் திகதி வானொலியோடு தனது பயணத்தை ஐ.பி.சி தமிழ் ஊடகம் பிரித்தானியாவில் ஆரம்பித்தது.
இன்றைக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கி, ஐ.பி.சி தமிழ் வானொலி எனும் நாமம் எவ்வித மாற்றங்களும் இன்றி அப்படியே அனைவர் மனங்களில் நிற்கிறது.
ஐ.பி.சி தமிழ் வானொலி என்பது புலம்பெயர் தமிழர்களிடையேயான மிக அபிமானம் வென்ற வானொலி என்று சொல்லும் அளவுக்கு ஆழப்பதிந்திருக்கிறது.
ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று நேற்றல்ல போர் மேகங்கள் சூழ்ந்த ஈழப் பொழுதுகள் யாவும், சாவின் ஓலமாய் சவாலான வாழ்க்கை சூழலுக்குள், தாய் தேசத்து உறவுகள் சிக்கி தவித்த போது, எம் மக்களின் உணர்வோடு சேர்ந்து பயணித்தது.
யாரோடு நோவோம் யார்கெடுத்து உரைப்போம் என்று தாயகத்தின் உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள உலகமே அங்கலாய்த்த போது நடு நிலைமையும் நம்பிக்கையும் ஆன ஒரே மக்கள் ஊடகமாய் அன்று செயற்பட்டது ஐ.பி.சி தமிழ் வானொலியே.
சாதாரணமான வானொலி ஊடகப்பரப்பில் இருக்கும் ஏனைய வானொலிகளைப்போலன்றி தனக்கான தனித்துவத்துவத்தை இன்று 26 ஆண்டுகள் கடந்தும் பேணிக்கொண்டிருக்கிறது ஐ.பி.சி தமிழ் வானொலி.
இந்திய சினிமாவின் மோகவலையில் சிக்கி முற்று முழுதாக அதனையே தழுவிய வெளிப்படுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சமகாலத்தில், நம்மவர்களையும் அவர்களின் படைப்புகளையும் களம் அமைத்து காற்றலைகளின் ஊடாக உலகத்தமிழர்களிடம் சேர்த்துவைப்பதில் ஐ.பி.சி தமிழ் வானொலி தன்னாலியன்றவரை முயற்ச்சித்துக்கொண்டே இருக்கிறது.
ஐ.பி.சி தமிழ் வானொலி காலத்தின் தேவைகருதி ஈழத்தமிழர்களின் மிக நீண்ட நெடுவரலாற்றின் பக்கங்களில் அவர்கள் சுமைகளாக சுமந்துகொண்டிருக்கும் கொடு வலிகளையும், அதன்மீதான இழப்புகளையும் கூடவே தானும் சுமந்து அதற்கேற்றாற்போலவே நிகழ்ச்சிகளை தயாரித்து தமிழர்களுக்கான தார்மீக உரித்துடைய வானொலி என்ற நிலைப்பாட்டில் நேயமனங்களில் வாழ்ந்துகொண்டிருக்குறது.
இப்படியாக வலி சுமந்து நிற்கும் எம் உறவுகளின் உணர்வுகளை அறிந்து அவர்களின் ரணங்களுக்கு மருந்தாக இருக்கும் ஐ.பி.சி தமிழ் வானொலி இன்றோடு 26 ஆண்டு அகவையை பூர்த்தி செய்துள்ளது.
ஐ.பி.சி தமிழ் ஊடகம்
ஊடகம் என்பது ஒரு இனத்தின் வலியைக்கடத்தக்கூடிய மிக முக்கியமான கருவி என்பதில் எந்தவிதமான மாற்றுகளுமே இருந்துவிடமுடியாது.
மின்சார தடை , பொருளாதார தடை , ஊடகத்தின் மீதான தடை இத்தனைக்கு மத்தியிலும் சமூக பொறுப்புள்ள ஊடகமாய் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தனது கடமையை செய்துகொண்டிருக்கிறது.
தமிழர்களுக்கான ஒரு வானொலியாக, தொலைக்காட்சியாக, வலையொளித்தளமாக, செய்தி இணையத்தளமாக இப்படி பல பரிமாணங்களில் மில்லியன் கணக்கான தமிழர்களை நேயர்களாகவும், பார்வையாளர்களாகவும், பின்தொடர்பவர்களாகவும் கொண்டு தனது ஊடகப்பரப்பின் கிளைகளை மிக விசாலமாக பரப்பியிருக்கிறது ஐ.பி.சி தமிழ் குழுமம்.
அந்தவகையில், இந்த ஐ.பி.சி தமிழ் ஊடக பயணத்தில் எங்களோடு கை கோர்த்து பயணிக்கும் அத்தனை உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.
ஆரம்பம் முதல் இன்று வரை நிர்வாகமும் அதன் பணிப்பாளர்களும் மாறி வந்தாலும் ஐபிசி தமிழ் ஊடகம் எனும் நாமம் எவ்வித மாற்றங்களும் இன்றி அப்படியே உலகத்தமிழ் உறவுகளின் மனங்களில் நிக்கிறது.
இந்த நீண்ட நெடும்பயணத்தில் எங்களோடு பயணித்து ஐ.பி.சி தமிழ் என்ற ஊடகத்திற்காக தங்களது உயிர்களைத்தியாகம் செய்த ஒப்பற்ற ஊடகப்போராளிகளை கனதியான வலிகளோடு இன்றைய நாளில் நினைவேந்துவதோடு, இத்தனை ஆண்டுகளில் உங்கள் பேரன்பின் பெருமிதங்களோடு பயணித்த நினைவுகளையும் தமிழ் உறவுகளாகிய நீங்கள் வழங்கிய பேராதரவிற்குமாக நன்றியுடைவர்களாக 26 ஆண்டுகளின் நிறைவில் இன்றைய நாளில் நினைவுகூருகிறோம்.
இலக்கை நோக்கி
ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களின் பெரும் பங்களிப்போடு, உயிர் பெற்று பயணித்துக்கொண்டிருக்கிறது ஐ.பி.சி தமிழ் ஊடகம்.
உலகெங்கும் வாழும் ஒட்டு மொத்த தமிழருக்கான தனிப் பெரும் ஊடக வலையமைப்பினை உருவாக்கி கட்டிக்காக்கும் பெருமை அவருக்கே உரியது.
எல்லாவற்றுக்கும் மேலாக இவ் 26 வருட வெற்றி பூர்த்தியின் பின்னால் உண்மையும், அர்ப்பணிப்பும், திறமையும், சமூக ஆர்வமும் கொண்ட பல பணியாளர்களின் கூட்டு உழைப்பும் இருக்கிறது.
அந்த வகையிலையே ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய வரலாற்றுக்கடமையை ஏற்று இன்றுவரை எதிர்ப்புகள், விமர்சனங்கள், இடையூறுகளைத்தாண்டி உலகத்தமிழர்களுக்கான உறவுப்பாலத்தை கட்டியமைத்துக்கொண்டிருக்கிறது ஐ.பி.சி தமிழ் என்று சொல்லுவதும் கூட சாலப்பொருத்தமானதாகும்.
தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் இழப்புகளால் நிறைந்துபோன வரலாற்றைக்கொண்ட ஒரு ஊடகமாக பயணித்த, பயணிக்கப்போகின்ற இந்த நினைவுகளோடு தொடர்ந்தும் உங்கள் பேரன்பின் பெருமிதங்களோடு ஒன்றாகிப் பயணித்து உலகத்தமிழர்களுக்கான உறவுப் பாலத்தை வலுப்படுத்துவோம்.
நமது இலக்கு பெரிது. அது இலகுவானதொன்றல்ல. ஆனால் நாங்கள் அந்த இலக்கை அடைய இன்னும் பல படிகளை இன்னும் பல தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது.
வாருங்கள் இதே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் ஐ.பி.சி தமிழ் குடும்பமாக இணைந்து பயணிப்போம். உலக தமிழருக்கு ஓர் உறவுப்பாலம் அமைப்போம்.
