மோட்டார் சைக்கிளில் சிக்கிய ஆடை - பல்கலை மாணவிக்கு நேர்ந்த துயரம்
விபத்தொன்றில் சிக்கி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
தலையில் ஏற்பட்ட பாரிய காயம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இச்சோக விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை, பின்சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரணத்திற்குக் காரணம்
பிரேதப் பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |