வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு மனைவியுடன், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வன்முறை கும்பல் ஒன்றினால் தம்பதியினர் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த கும்பல் , மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அடையாளம் காட்டிய மனைவி
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் வவுனியா , ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடைக்கலம் கொடுத்தவர் கைது
அதேவேளை சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுக்கவுள்ளனர்.
தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் சந்தேகநபர்கள் குறித்து காவல்துறையினருக்கு அறிய தருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |