கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தன்னிசை்சையாக திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
இதனால் அதன் மூன்று வான் கதவுகள் இன்று (05.08.2026) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீர்த்தேக்கத்திற்கு பெருமளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த வான் கதவுகள் தானாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வான் கதவுகள் தன்னிச்சையாக திறப்பு
அதன்படி, திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வான் கதவிலிருந்தும் வினாடிக்கு சுமார் 30 கன மீற்றர் வீதம் நீர் கொத்மலை ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்தால், நீர்த்தேக்கத்தின் எஞ்சியுள்ள வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படக்கூடும் என பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் பாயும் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் ஆற்றை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயரக்கூடிய சாத்தியம் இருப்பதால், ஆற்றைக் கடக்கும் நடவடிக்கைகள், நீராடுதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வழங்கும் மேலதிக பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |