யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயம்... கிடப்பில் போடப்பட்ட நம்பியாருடைய அறிக்கை : தமிழ் எம்.பி பகிரங்கம்
போர் முடிந்து பதினாறு வருடங்களான பின்னரும் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து படையினர் கைப்பற்றிய காணிகளில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்ககோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று (15) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, "அதிஉயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து தனியார் காணிகள் எத்தனையோ ஏக்கர் கணக்கில் பிடிக்கப்பட்டுள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயம்
யாழ் குடாநாட்டை பொறுத்தவரை அதன் 30 வீதமான நிலப்பரப்பு அதி உயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து சட்டவிரோதமாக சட்ட ஏற்பாடுகள் எதுவுமின்றி கைப்பற்றி வைத்துள்ளது. அரசாங்கம் கைப்பற்றி வைத்திருப்பதற்கான சட்ட ஒழுங்குகள் எதுவுமின்றி தொடர்ந்தும் அந்த நிலங்களை வைத்திருக்கின்றது.
சமாதான முயற்சிகளின் போது இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக வெடித்த போது சிறிலங்கா அரசாங்கம் நம்பியார் என்ற இந்திய இராணுவ அதிகாரியின் ஏற்பாட்டில் - அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் மாற்றங்களை செய்வதற்கு அவருடைய ஆலோசனைகளை பெற்று அதன்படி செயற்படப்போவதாக அறிவித்திருந்தது.
நம்பியாருடைய அறிக்கையை எடுத்துபார்த்தால் - அது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இருக்கின்ற வரைக்கும் அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆட்டிலறி தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்ற வரைக்கும, உயர் பாதுகாப்பு வலயங்களில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாமல் போனால் அல்லது இந்த ஆட்டிலறி காரணமாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இல்லாமல் போனால் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் அகற்றலாம் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
போர் முடிந்து பல வருடங்கள்
இன்றைக்கு போர் முடிந்து 16, 17 வருடங்களாகின்றது. ஆனால் இன்றைக்கும் அந்த அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களிற்கு தங்களின் சொந்த காணி நிலைக்கு திரும்பி போகமுடியாத நிலைக்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசும், வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய குற்றம்.
எங்களை பொறுத்தவரையிலே தெற்கிலே அவ்வாறான ஒரு மோசமான செயற்பாடு நடைபெற்றதாகயிருந்தால், இன்றைக்கு அந்த அரசாங்கம் அடித்துரத்தப்பட்டிருக்கும்.
தொடர்ந்தும் வடகிழக்கிலே எந்த விதமான நியாயமும் இல்லாமல் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகளை பறித்து வைத்திருப்பது முற்றிலும் தவறான ஒரு செயல்.'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

