ஜேர்மனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் வந்தவரின் சண்டித்தனம்
ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்தவர் 10 பேர்கொண்ட கும்பலுடன் சேர்ந்து நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சகோதரியின் குடும்பத்துடன் முரண்பாடு
ஜேர்மனில் வசித்துவரும் ஈச்சமோட்டையைச் சேர்ந்த நபர் விடுமுறையை கழிப்பதற்காக அண்மையில் தனது சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வந்த அவர் தனது சகோதரியின் குடும்பம் மற்றும் சகோதரியின் கணவருடன் முரண்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் நேற்று திங்கட்கிழமை (14) மது அருந்தியுள்ளார்.
சகோதரியின் கணவனின் நண்பர் மீது தாக்குதல்
இதன்போது , முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற போது நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து , மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ,காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதலாளிகள் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

