இலங்கையில் 30 ஆயிரம் பேர் மரணத்தின் விளிம்பில் - வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கை முழுவதிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும், அவர்களில் 30 ஆயிரம் பேர் மரணத்தின் விளிம்பில் உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், தொற்றா நோய் இருப்பதனாலேயே கொவிட் தடுப்பூசியை சஜித் பிரேமதாஸ தவிர்த்துவருவதாக குறிப்பிட்டார்.
இன்று அனைவரும் நோயில் பாதிக்கப்பட்டுள்ளோம். தொற்றா நோய்க்கு அடிமையாகிவிட்டோம். குறிப்பாக உர இறக்குமதிக்காக 400 பில்லியன் ரூபா வரை செலவாகின்றது. உண்மையில் இலங்கையில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் சரிவர இடம்பெறுகின்றதா என்பது கேள்விக்குறியாகும். சஜித் பிரேமதாஸ சிங்களப் பத்திரிகையில் தெரிவித்தபடி, பசளை மற்றும் விவசாய இரசாயன பதார்த்தங்களை விவசாயிகளுக்கு வழங்கினால் இலங்கையும் விசாலா நகரைப்போலாகிவிடும் என்று கூறியுள்ளார் .
இன்றுவரை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 150000 பேர் உள்ளனர். இன்று மரண விளிம்பில் 30000 பேர் இருக்கின்றனர். பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியாக பல விடயங்களை செய்யலாம். அனைவரும் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். பகுதி பகுதியாக இதனை செய்யலாம் என்கின்றார்கள். திடீரென இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை விவசாயிகளின் மனதில் சொல்கின்றனர்.
சஜித் பிரேமதாஸ கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றார். ஆனால் அது உண்மையில்லை. தடுப்பூசியைப் பெற்றால் மரணத்தை அடையலாம் என்ற அச்சுறுத்தலில் அவர் இருக்கின்றார். வீட்டிலிருந்து அவர் உணவுபெற்று சாப்பிடலாம். ஆனால் சிறிய மக்களின் வீடுகளில் சென்று தேநீர் அருந்தும் மனிதர் அவரல்ல.
அந்த வகையில் அவர் எப்படி விவசாயம், கரிம உரம் பற்றி பேசலாம்? இந்த எதிர்க்கட்சித்தலைவர் சிங்கப்பூரில் இருந்தால் நிச்சயம் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்” எனத் தெரிவித்தார்.