சி.டி விக்ரமரத்னவின் மரணம்...! பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
மறைந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான வழக்கில் அவரது பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் 28 அம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காவல்துறை சார்ஜன்ட் (697) சுசந்த இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
உத்தியோகபூர்வ துப்பாக்கி
இதனடிப்படையில், சி.டி விக்ரமரத்ன தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி என்னிடம் இருந்து வாங்கிச் சென்றார் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண தெற்கு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சாட்சியங்களை வழிநடத்தினர்.
விசாரணையில் மேலும் தெரிவித்த அவர், “நான் முன்னாள் காவல்துறை மா அதிபரின் பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரியாக 16 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளேன்.
ஆனால், அவர் ஒருபோதும் எனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டதில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்
அன்றைய தினம் அவர் எனது துப்பாக்கியைப் பெற்றுக்கொண்ட பின்னர் தோட்டாக்களையும் கேட்டார்.
வழக்கமாக உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் காலணிகளை (Shoes) அணிவார் ஆனால், அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளில் அவர் காலணிகளை அணியவில்லை.

உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் ஒருபோதும் தண்ணீர்ப் போத்தல்களை எடுத்துச் செல்வதில்லை.
நான் அவரிடம் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் கொடுத்த பிறகு, ஒரு போத்தல் தண்ணீரைக் கொண்டு வருமாறு என்னிடம் கூறினார்.
நான் அங்கிருந்து வெளியேறிய அடுத்த கணமே, துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது.
பயன்படுத்தப்பட்ட தோட்டா
நான் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன்.
வீட்டிலிருந்த மற்றவர்களின் உதவியுடன் அவரை உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிந்தேன்” என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரியின் சாட்சியத்தைப் பதிவு செய்துகொண்ட நீதவான், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகளை (Spent Cartridges) அறிக்கைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் (Government Analyst) சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சி.டி விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |