துறைமுகத்தில் தேங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருவதாகவும் இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
புதிய வரித் திருத்தங்கள்
அதன்படி, வாகனங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு, நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரித் திருத்தங்கள் மற்றும் மேலதிக தண்டப்பணங்கள் (சுமார் 50 வீத கூடுதல் வரி) காரணமாகவே இந்தச் சிக்கல் எழுந்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள வாகன வியாபாரிகள் அல்லர், மாறாகத் தமது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி குடும்பத் தேவைக்காக எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் முறையின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்த சாதாரண பொதுமக்களாவர்.
வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருகின்றது. சில வாகனங்களுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
நீதி பெற்றுத்தர வேண்டும்
நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றினோம், ஆனால் இப்போது தண்டிக்கப்படுகிறோம், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, “இந்த வாகனங்கள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் தொடர்பான வழக்குடன் தொடர்புடையவை.
தற்போது உரிமையாளர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண வரியைச் செலுத்தி வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், நீதிமன்ற வழக்கு முடியும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய முடியாது. விதிமுறைகளை மீறியதற்கான தண்டப்பணத்தைச் செலுத்தி, உடனடியாக வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.
சமீபத்திய சூறாவளி காரணமாகத் துறைமுகத்தில் உள்ள வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |