முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்
முல்லைத்தீவு
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நினைவு கூரப்பட்டது.
விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10.10.2013) காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நினைவு கூரப்பட்டுள்ளது.
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சமூக செயற்பாட்டாளர் சகீலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் வடமாகான கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.