வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
புதிய இணைப்பு
இன்றைய நாளுக்கான (05.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
காலை 09.00க்கு ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 06.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.00 முதல் 09.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.00 முதல் 10.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 முதல் மாலை 6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
மாலை 06 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதுடன் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு, பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு ஆகிய சட்டமூலங்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், விவாதத்தின் பின்னர் இவ்வாறு மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
கடந்த நவம்பர் 14 ஆம் திகதி 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததுடன் 8 பேர் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்திருந்தனர். அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சபை அமர்வுகள் பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |