ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் நிலைகள் மீது கடந்த 17 ஆம் திகதி மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
“செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகளை வீசி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கும், சா்வதேச சரக்குக் கப்பல்களும் உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று கண்டறியப்பட்ட நிலைகளைக் குறிவைத்து 14 ஏவுகணைகள் வீசப்பட்டன” என அமெரிக்க பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு
யேமனில் ஹவுதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா்.மேலும், ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அவா்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
எனினும், சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா, அப்போதைய அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான படைகளுக்கு ஆதரவாக ஹவுதி கிளா்ச்சியாளா் கள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது.
அதையடுத்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஐ.நா. முயற்சியின் பலனாக, சவூதி அரேபியா கூட்டுப் படைக்கும், ஹவுதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே ஸ்வீடனில் போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்டது.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல்
இந்நிலையில் , ஹவுதி கிளா்ச்சியாளா்களைப் போலவே ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாக முதலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
செங்கடலில் தாக்குதல்
அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹவுதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தின. எனினும் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் தங்களது தாக்குதலைத் தொடரப்போவதாக சூளுரைத்தனர்.
அதையடுத்து, ஹவுதி கிளா்ச்சியாளா்களுக்கு சா்வதேச நிதி வரத்தை முடக்கி, அதன் மூலம் அவா்களது செங்கடல் தாக்குதல் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவா்களது படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.
அதன் தொடா்ச்சியாக, தற்போது யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா தற்போது 4-ஆவது முறையாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |