மருந்தகங்கள் சுற்றிவளைப்பின் போது 5 பேர் கைது
நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் நேற்று (20) சோதனை மேற்கொண்ட போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வைத்திய பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1600 மருந்துகளுடன் 5 பேர் கைது
கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் சீதுவ காவல்துறை உத்தியோகத்தர்கள் சீதுவை மருந்தகங்களை சோதனையிட்டனர்.
இதன்போது பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல், மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றத்திற்காக 1600 மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 29, 32, 53 மற்றும் 65 வயதுடைய பண்டாரவளை, வெலிசர, திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பில் 2008 பேர் கைது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டனர்.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |