இலங்கையில் 6 மாதத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் வன்புணர்வுகள்
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் வன்புணர்வுகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 456 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுவர் வன்புணர்வுகள் தொடர்பாக ஆயிரத்து 296 முறைப்பாடுகளும், காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், வன்புணர்வுகள் தொடர்பான 242 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன், சிறுவர்கள் யாசகம் பெறுதல் தொடர்பில் 196 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக முறைப்பாடுகள்

பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் போலிக்காரணத்தின் கீழ் சிறுவர்கள் யாசகம் பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்தே இது தொடர்பான அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்துவது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி மூலம் சிறுவர்களை வன்புணர்விற்குட்படுத்துதல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்தாண்டு தேசிய திட்டம்

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல் நிலையங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக
அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு தேசிய திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்
அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.